பெண்களின் ஆரோக்கியத்தில் சித்த மருத்துவத்தின் பங்குView in: English

 – Dr. S. தில்லைவாணன், BSMS, MD(Siddha)

பெண்கள் நாட்டின் கண்கள் என்பது வெறும் வாக்கியம் மட்டுமல்ல ,அது ஒரு நாட்டின் வளர்ச்சியும் தான். அத்தகைய சிறப்புடைய பெண்களின் உடல் நலன் மற்றும் மன நலனை பேணிக்காப்பது இன்றியமையாதது.  

பெண்களுக்கு, உடல் சார்ந்த பிரச்சனைகளில் மிகவும் கவனிக்கப்படவேண்டியது மாதவிடாய் சார்ந்த தொந்தரவுகளும், மார்பக மற்றும் கருப்பைவாய் புற்று நோயும் தான். பருவகால பெண்கள் 9 % முதல் 23 % வரை  பிசிஓஎஸ்  எனப்படும்  சினைப்பை நீர்க்கட்டியால் பாதிக்கப்பட்டு அதன் பல்வேறு நோய்க்குறிகளோடு உள்ளது வருத்தத்திற்கு உரியது .

சினைப்பை நீர்க்கட்டி பல்வேறு நோய்க்குறிகள் கொண்டது. ஒழுங்கற்ற முறையில் மாதவிடாய், சூதக வலி,உடல் பருமன்,  ஆண்தன்மை  கொண்ட தோற்றம், முகத்தில் முடி முளைத்தல், அதிக முகப்பருக்கள், கழுத்தை சுற்றி கருமை நிறப்படை போன்ற பல்வேறு குறிகுணங்களை உடையது. 

PCOD

சினைப்பை நீர்க்கட்டிக்கு உடல் பருமனும், உடல் உழைப்பில்லாத வாழ்வியல் மாற்ற நெறிமுறைகளும் , தவறான உணவு பழக்க வழக்கங்களும், பரம்பரை நோய்க்காரணத்தாலும் ஏற்படுகிறது. இதனால் உடலில் இன்சுலின் சுரப்பு அதிகரித்து அதன் காரணமாக ஆண்தன்மைக்கு காரணமான ஆண்ட்ரொஜென் சுரப்பு அதிகரிப்பதால் மேற்கூறிய நோய்க்குறிகள் ஏற்படும்.  உடல் பருமனைக் குறைக்கும்படியான நடைப்பயிற்சியும், உடல் பயிற்சியும், உணவு முறைகளும் வராமல் தடுப்பதற்கு மிக அவசியம் . நீரிழிவு நோய்க்கான உணவு முறைகளையும், பழக்க வழக்கங்களையும்  பின்பற்றுவது  சிறந்தது. 

மகளிர் நலனை பொறுத்தவரை சித்த மருத்துவத்தில்  பல்வேறு மூலிகைகள் சொல்லப்பட்டுள்ளது. அவற்றுள் மிக முக்கியமானவை சோற்றுக்கற்றாழை, அசோகப்பட்டை, கழற்சிக்காய், தண்ணீர்விட்டான் கிழங்கு, அஸ்வகந்தா, வெள்ளிலோத்ரம்,  பிரமி ,சீந்தில், சிறுகுறிஞ்சான், மூக்கிரட்டை. இவற்றை அந்தந்த நோய்நிலைகளுக்கு மருத்துவர் ஆலோசனைப்படி பயன்படுத்த சிறந்த பயனளிக்கும்.

ஒழுங்கற்ற ஹார்மோன் சுரப்பினை சரிசெய்ய சோற்றுக்கற்றாழையும், கருப்பையை பலப்படுத்தவும், மாதவிடாயில் அதிக ரத்தப்போக்கினை கட்டுக்குள் கொண்டு வர அசோகப்பட்டையும் வெள்ளிலோத்ரபட்டையும் உதவும். சினைப்பை நீர்கட்டியினை சரிசெய்ய கழற்சிக்காயும், மாந்தாரைப்பட்டையும், கல்யாணமுருக்கு இலையும் சிறந்தது. ஆண் ஹார்மோன் சுரப்பினை கட்டுக்கு கொண்டு வர  கீழாநெல்லி, சதாவேரியும் உதவும். 

மன அழுத்தத்தை போக்கும் மூலிகைக் கீரையான பிரமி, பிட்யூட்டரி  மற்றும் சினைப்பை அச்சில் செயல்பட்டு மாதவிடாய் சீராக நடக்க உறுதுணையாக இருக்கும். அஸ்வகந்தா மாதவிடாய் பிரச்சனைக்கு  காரணமான நீர்க்கட்டி நிலையிலும், தைராய்டுசுரப்பி சரிவர சுரக்காத நிலையிலும் சிறந்த தீர்வளிக்கும் .சிறுகுறிஞ்சான் உடல் பருமனை குறைக்க உதவும்.

எப்போது பெண்கள் வயதிற்கு வந்த காலம் முதல் கருப்பு உளுந்தும், எள்ளு உருண்டை, நாட்டு கோழி முட்டை, நல்லெண்ணெய் போன்ற உணவுகளை வழங்க மறந்தோமோ அப்போதே மாதவிடாய் பிரச்சனைகள் அவர்களை சூழ ஆரம்பித்துவிட்டது. இரும்புசத்து மிக்க வெந்தயக் களியும், கால்சியம் சத்து மிக்க பிரண்டை துவையலும், மாதவிடாயை தூண்டும் கொள்ளுக்கஞ்சியும், உடல் குளிர்ச்சிக்கு வெண்பூசணியும்  இன்றைய மகளிர்க்கு இன்றியமையாததாக உள்ளது. 

சித்தர்கள் அருளிய யோகாசன முறைகளான சர்வாங்காசனம் தைராய்டு சுரப்பி கோளாறை சரி செய்யும். அதோடு மாதவிடாய், சினைப்பை நீர்க்கட்டி தொந்தரவுகளில் இருந்து விடுபட சூரியநமஸ்காரம், பாலாசனம், பத்தகோணாசனம், தனுராசனம், புயங்காசனம், பட்சி மோத்தாசனம், பரத்வாஜசனம், போன்ற பல்வேறு ஆசனமுறைகளும் உதவும். தியானமும் பிராணாயாமமும் பெரும் உறுதுணையாக இருக்கும். 

இரவுப்பணியில் ஈடுபடும் பெண்களுக்கு மெலடோனின் எனும் ஹார்மோன் சுரப்பு குறைவு ஏற்படும். இந்த ஹார்மோன் நம் மூளையில் உள்ள பீனியல் சுரப்பியில் சுரக்கும். அது உச்சகட்டமாக சுரக்கும் நேரம் விடியற்காலை 2 மணி முதல் 5 மணி வரை தான். அதுவும் இருட்டில் தான் அந்த ஹார்மோன் அதிகமாக சுரக்கும். இந்த மெலடோனின் ஹார்மோன் சுரப்பு குறைவினால் மற்ற  நாளமில்லா சுரப்பிகளில் ஏற்றத்தாழ்வு ஏற்படும் .மேலும் இந்த சுரப்பு குறைவு உடையவர்களுக்கு மார்பக புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றது.

கருவை உருவாக்குவதில் ஆண்களுக்கு சரிபங்கு இருந்தாலும் கருவை பத்து மாதம் சுமந்து குழந்தையை பெற்றுக்கொள்ளும் வரை பெண்கள் படும் சிரமங்கள் அளவில்லாதது . உடலளவிலும், மனதளவிலும் அவர்களை அரவணைத்து  ஆதரவு கொடுத்து காப்பது நம் சமுதாயத்தின் கடமை .

Featured Deals
English
Peribytes
Logo
Compare items
  • Total (0)
Compare
0
error: