சுகமான பிரசவம் – 2 : முதல் பேறுகால பரிசோதனைView in: English

– Dr. வித்யா செல்வம், MBBS, MD, DNB, MRCOG(UK)

Dr. வித்யா செல்வம், மகப்பேறு, பெண்கள் நலம், குழந்தையின்மை மற்றும் லேப்ராஸ்கோபி அறுவை சிகிச்சை நிபுணர்.  இவர் குழந்தையின்மைக்கான ஆலோசனை மற்றும் சிகிச்சைகள், பிரசவத்திற்கு முந்தைய மற்றும் பிந்தைய பரிசோதனைகள், சுக மற்றும் அறுவை சிகிச்சை பிரசவம், பெண்கள் நல சிகிச்சைகள், லேப்ராஸ்கோபி அறுவை சிகிச்சைகள் மற்றும் பேறுகால ஸ்கேன் எடுப்பதில் தேர்ந்தவர்.  இவர் சென்னையில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரியில் துணைப் பேராசிரியராக உள்ளார்.

இந்த தகவல்களால் நிறைந்த இன்டர்நெட்‌ யுகத்தில் தகவல்கள் இல்லாமல் இருப்பது எத்தனை தவறோ அதை விட தவறானதும் ஆபத்தானதும் என்னவென்றால் தவறான தகவல்களோடு முடிவெடுப்பது.

நம் தகவல்களின் நம்பகத்தன்மையை முடிவு செய்வது அவை கிடைக்கப்பெறும் மூலம் எது என்பதே. கர்ப்பகாலம் மற்றும் பேறு காலத்தில் உங்களுக்கு வேண்டிய தகவல்களைப் பெறுவதற்கு சிறந்த வழி அதற்கான படிப்பையும் பயிற்சியையும் பெற்ற மருத்துவர்களிடம் பேசிக் தெளிவதே. 

இந்தக்  கட்டுரையில் முதல் கர்ப்பகால பரிசோதனைக்கு எப்படி தயாரவது மற்றும் அந்த நேரத்தில் என்ன எதிர்பார்க்கலாம் என்பதைப் பார்ப்போம்.

First Antenatal Checkup

எப்போது பரிசோதனைக்குச் செல்ல வேண்டும்?

சிறுநீர் பரிசோதனை மூலம் நீங்கள் கர்ப்பமாக இருப்பதை உறுதிபடுத்திக் கொண்ட உடன்  பரிசோதனைக்குச் செல்லுங்கள்.   நீங்கள் 35 வயதிற்கு மேற்பட்டவராகவோ, ஏதேனும் உடல் நோய்க்காக சிகிச்சையில் இருப்பவராகவோ, அதற்கான மருந்துகள் எடுத்துக் கொண்டிருந்தாலோ அல்லது முந்தைய கரு ஏதேனும் காரணத்தால் கலைந்திருந்தாலோ உடனே பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

யாரை உடன் அழைத்துச் செல்ல வேண்டும்?

யார் உங்கள் கர்ப்பகாலம் முழுவதும் உங்களுடன் இருப்பாரோ அவரை உடன் அழைத்துச் செல்வது நல்லது.  ஏனெனில் அது அவருக்கும் உங்களுக்கும் இந்த காலத்தில் என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக் கூடாது என்பதை தெளிவாகப் புரிந்து கொள்ள உதவும். 

உங்கள் துணைவரை உடன் அழைத்து செல்வது உங்கள் இருவரின் பொறுப்புகளை உணர்ந்து கொள்ள இருவருக்கும் உதவும்; இனிமையான நினைவுகளையும் உருவாக்கும்🙂

என்ன எடுத்துச் செல்ல வேண்டும்?

உங்கள் முந்தைய மருத்துவ அறிக்கைகள் இருப்பின் அவற்றை கண்டிப்பாக எடுத்துச் செல்லவும்.  உங்கள் துணைவர் ஏதேனும் நோய்க்காக சிகிச்சை மேற்கொண்டிருப்பின் அவரது மருத்துவ அறிக்கைகளையும் எடுத்துச் செல்லவும்.

உங்களுக்கு பேறுகாலத்தைப் பற்றி பல சின்ன சின்ன கேள்விகள் இருக்கும்.  எடுத்துக்காட்டாக, இருசக்கர வாகனத்தில் வேலைக்குப் போகலாமா? இவை போன்ற கேள்விகளைக் குறித்து வைத்து, அதையும் கொண்டு செல்லலாம். இந்த குறிப்பு இச்சந்திப்பை முழுமையான சந்திப்பாக  மாற்ற உதவும்.

இந்த முதல் சந்திப்பின் முக்கியத்துவம் என்ன?

மருத்துவரின் பார்வையில், உங்கள் கர்ப்பகாலம் மற்றும் பேறுகாலத்தை எளிமையானதா அல்லது ஏதேனும் சிக்கல் இருக்க வாய்ப்புள்ளதா என்று பல கேள்விகள் மற்றும் சோதனைகள் மூலம் வகைப்படுத்த உதவும்.

மருத்துவர் என்ன கேட்பார்?

மருத்துவர் உங்களைப் பற்றிய அனைத்து விவரங்களையும் கேட்பார்.  உங்கள் வயது, திருமணம் ஆகி எவ்வளவு ஆண்டுகள் ஆனது, இயற்கையான கருத்தரிப்பா அல்லது கருத்தரிப்பு சிகிச்சை மூலம் கருத்தரித்தீர்களா, மாதவிடாய் சுழற்சி சரியாக இருக்குமா, முந்தைய மாதவிடாய் தேதி, சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், தைராய்டு, முந்தைய அறுவை சிகிச்சைகள் போன்றவற்றை அவசியம் கேட்பார்.  இவற்றை பற்றி சரியான விவரங்களைத் தெரிவிக்கத் தயாராக இருங்கள்.  சிகிச்சைகள் பற்றிய விவரங்களுக்கு மருத்துவ அறிக்கைகள் கொண்டு செல்வது பயனுள்ளதாக இருக்கும்.  இதற்கு முன் கருவுற்றிருந்தால், அதைப் பற்றிய விவரங்களையும் விரிவாகக் கேட்பார்.

இந்த விவரங்களை உடன் இருப்பவர்கள் முன்னிலையில் தெரிவிக்க தயக்கமாக இருந்தால், மருத்துவர் பரிசோதிக்கும்போது கிடைக்கும் தனிமையில் தெரிவிக்கலாம். 

என்ன பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டியிருக்கும்?

உங்கள் உயரம் மற்றும் எடை அளவிடப்பட்டு BMI எனப்படும் குறியீடு கணக்கிடப்படும்.  இந்தக் குறியீடு 30க்கு அதிகமாகவோ அல்லது 18க்கு குறைவாகவோ இருந்தால் உங்கள் பிரசவம் சிக்கலானதாக இருக்க வாய்ப்புகள் அதிகம் என்று குறித்துக் கொள்வார்.  

உங்கள் ரத்த அழுத்தம் மற்றும் நாடித்துடிப்பு பரிசோதிக்கப்படும்.  ரத்தசோகை(Anaemia) மற்றும் கழுத்தில் தைராய்டு வீக்கம் உள்ளதா என்ற பரிசோதிக்கப்படும். 

இதயம் மற்றும் நுரையீரல் பகுதியில் ஸ்டெதாஸ்கோப் கொண்டு நீங்கள் ஆரோக்கியமாக இருப்பதை உறுதிபடுத்திக் கொள்வார். உங்கள் வயிறு மற்றும் அடிவயிற்றுப் பகுதிகளிலும் பரிசோதிப்பார்.  உங்கள் பிறப்புறுப்பின் உள்பகுதிகள் சரியான அளவில் விரிவடைந்து அருகில் உள்ள மற்ற உறுப்புகள் சரியான அளவில் உள்ளதா என்பதையும் பரிசோதிப்பார்.

முதல் ஸ்கேன் எப்போது செய்ய வேண்டும்?

6 முதல் 7 வாரங்களில் செய்யப்படும் முதல் ஸ்கேன் பல முக்கிய விவரங்களை அளிக்கும்.  அதனால் மருத்துவர் உங்களை இந்த நேரத்தில் ஸ்கேன் செய்ய அறிவுறுத்துவார்.  கர்ப்பகால ஸ்கேன்களைப் பற்றி விரிவாக பின்னர் பார்க்கலாம். 

ரத்த மற்றும் சிறுநீர் பரிசோதனைகள் எதற்காக செய்யப்படுகிறது?

மருத்துவர் உங்கள் ஆரோக்கியம் பற்றி அறிந்து கொள்ள பல பரிசோதனைகள் மேற்கொள்ளச் சொல்வார்.

ஹிமோகுலோபின் – ரத்தசோகை இருக்கிறதா என்பதை அறிய 

உணவுக்கு முன் மற்றும் பிந்தைய ரத்த சர்க்கரை அளவு – சர்க்கரை நோய் இருக்கிறதா என்பதை அறிய 

தைராய்டு டெஸ்ட் – தைராய்டு சுரப்பியின் நிலை பற்றி அறிய 

ரத்த வகை  – அவசர சிகிச்சைகளுக்கு உதவியாக 

HIV, VDRL, HBSAG, HepC – உங்களுக்கு இந்த தொற்றுகள் இருந்தால் அது உங்கள் கருவை வெகுவாக பாதிக்கும்.  இவற்றை முன்னரே அறிந்து அதற்கான பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றினால் அவ்வாறு ஏற்படும் பாதிப்பை வெகுவாகக் குறைக்க முடியும். 

சிறுநீர் பரிசோதனை – சிறுநீரில் உள்ள உட்பொருள்களைப் பகுத்தாய்வது நம் உடலின் பல உறுப்புகளின் தன்மையை எடுத்துக்காட்டும்.

என்ன வகையான மருந்துகள் பரிந்துரைக்கப்படும்?

நீங்கள் ஏற்கனவே ஃபோலிக் ஆசிட் மாத்திரை எடுத்துக் கொள்ளவில்லை எனில், தினம் ஒரு மாத்திரை எடுத்துக் கொள்ள வேண்டும்.  இது ஒரு  காய்கறி  மற்றும் இலைகளில் உள்ள வைட்டமின்; செல்கள் பெருகும் காலத்தில் மிக முக்கியமாகக் தேவைப்படும் ஒரு வைட்டமின். .  கர்ப்பகாலம் என்பது ஒரு சொல் ஒரு கோடி சொல்களாக மாறும் காலம் அல்லவா?  எனவே  இந்த சமயத்தில் உடலுக்கு மிகவும் தேவையான வைட்டமின் இந்த ஃபோலிக் ஆசிட்.    கருவுறுவதற்கு சில மாதங்கள் முன்பாகவும், கருவுற்ற சில மாதங்களுக்கும் இந்த வைட்டமின் எடுத்துக் கொள்வது கருவில் குழந்தை ஆரோக்கியமாக வளர உதவி செய்வதாக பல ஆராய்ச்சிகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. 

உங்களுக்கு வாந்தி அதிக அளவு இருந்த அது உங்கள் ஆரோக்கியத்தைப் பாதிப்பதாகத் தெரிந்தால், அதற்கும் மருந்துகள் பரிந்துரைப்பார்.

நீங்கள் ஏற்கனவே ஏதேனும் மருந்துகள் (அலோபதி, ஆயுர்வேதா போன்ற மருந்துகள் ஏதுவாக இருப்பினும்) எடுத்துக் கொண்டிருந்தால், மருத்துவரிடம் காண்பித்து அவை அதே அளவில் எடுத்துக் கொள்வது நல்லது தானா என உறுதி படுத்திக் கொள்ளவும். 

அடுத்த பகுதியில் கர்ப்ப காலத்தில் செய்ய வேண்டிய ஸ்கேன்கள் என்ன? எப்போது செய்ய வேண்டும்? ஏன் செய்ய வேண்டும்? அவற்றின் முக்கியத்துவம் என்ன? போன்ற கேள்விகளுக்கு விடைகளைப்‌ பார்க்கலாம்.

வருங்கால தாய்மார்களே, உங்கள் பேறுகாலம் சுகமாக அமையட்டும்.  உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின், doctor@peribytes.com என்ற இணைய முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம் அல்லது கீழே கமெண்ட் செய்யவும்.  உங்கள் கேள்வியின் தன்மையை பொறுத்து உடனே அல்லது அடுத்த கட்டுரையில் பதிலளிக்கப்படும்.  உங்களது அடையாளத்தை வெளிப்படுத்தாமலும் கேள்விகள் கேட்கலாம்.  இந்த கட்டுரை ஒரு வழிகாட்டுதல் மட்டுமே, மருத்துவரை அணுகாமல் எந்த சிகிச்சை அல்லது மருந்தை எடுத்துக்கொள்ள வேண்டாம்.  அடுத்த பகுதியில் சந்திப்போம்!!!

Featured Deals
English
Peribytes
Logo
Compare items
  • Total (0)
Compare
0
error: